முடிந்தது தேர்தல் திருவிழா..! சின்ன சின்னதாய் நடந்த சுவாரசியங்கள் என்ன தெரியுமா..?

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடந்திருக்கிறது. அவை என்ன என்பதை காண்போம்.

Local body elections of Tamilnadu got over

*திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி மன்ற தலைவராக 82 வயது மூதாட்டியான விசாலாட்சி வெற்றி பெற்றுள்ளார். அதே போல மதுரை மேலூரில் வீரம்மாள் என்கிற 79 வயது மூதாட்டி அரிட்டாபட்டி ஊராட்சித் தலைவராக தேர்வாகி இருக்கிறார்.

*கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என் தொட்டி ஊராட்சி தலைவராக 21 வயதே நிரம்பிய கல்லூரி மாணவியான ஜெயராணி வெற்றி பெற்றிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபிதா(22) வெற்றி அடைந்திருக்கிறார்.

* நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் போட்டியிட்ட திருநங்கை ரியா திமுக சார்பாக வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தின் முதல் திருநங்கை கவுன்சிலர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

* அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரியில் தங்கள் முதல் தேர்தல் வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளனர்.

*விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த சரஸ்வதி தனது வேலையை ராஜினாமா செய்து அதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவர் அதிக வாக்குகள் பெற்று தலைவராக தற்போது தேர்வாகி இருக்கிறார்.

* பட்டியலின பெண்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை ஊராட்சி தலைவர் தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்தனர். அங்கு 10 ஓட்டுகள் மட்டுமே பெற்று பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

* சம அளவில் ஓட்டுகள் வாங்கியதால் பல இடங்களில் ஊராட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் குலுக்கல் முறையில் தேர்வாகி உள்ளனர்.

*திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஒருவர் தனது இரு மனைவிகளையும் தேர்தலில் நிறுத்தி ஊராட்சி தலைவிகளாக வெற்றி பெற வைத்துள்ளார்.

*பெரம்பலூர் மாவட்டம் ஆதலூர் ஊராட்சி தலைவராக தேர்வாகிய மணிவேல், வெற்றி பெற்ற சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார்.

*வேதாரண்யம் அருகே இருக்கும் கருப்பம்புலம் ஊராட்சியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடந்துள்ளது. அங்கு பட்டதாரி இளைஞர் ஒருவர் தலைவராக தேர்வாகி இருக்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios