சென்னை குரோம்பேட்டைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 ). நேற்று மாலை இவர் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அதிமுக சார்பாக அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக எச்சரித்ததோடு, இந்த சம்பவத்திற்கு காரணம் அலட்சியமாக இருந்த அதிகாரிகளும் காவல்துறையும் தான் என்று குற்றம் சாட்டியிருந்தது. இதனிடையே அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் தமிழகம் முழுவதும் அகற்றப்பட்டதோடு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த துயர சம்பவத்திற்கு பிறகும் பல இடங்களில் பேனர்கள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பகுதிகளில் பல்வேறு கட்சிகளின் சார்பிலும் திருமணம், காது குத்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்கப்பட்டிருக்கின்றன. 

அனுமதியின்றி பேனர் வைக்க கூடாது என்ற சட்டம் இருக்கும் நிலையிலும் அதை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நகராட்சி அதிகாரிகளும் அதை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோல தமிழகத்தின் பல இடங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படவில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.