இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நேற்று முன்தினம் முதல் மீண்டும் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்திந்திருந்தது.

கொரோனா பரவுதல் அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் நீதி மைய்யம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே 44 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டே நாளில் 294 கோடி அளவில் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.122 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியிருக்கிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ. 32.45 கோடி அளவில் மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ. 31.17  கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ. 29.09 கோடியும் கோவை மண்டலத்தில் ரூ.20.01 கோடியும் சென்னை மண்டலத்தில் ரூ.9.28 கோடியும் வசூலாகி இருக்கிறது. நேற்று முன்தினம் 172.59 கோடி ரூபாய் வருவாய் வந்த நிலையில் மொத்தமாக இரண்டு நாட்களிலும் 294.59 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது பண்டிகை நாட்களில் டாஸ்மாக்கில் கிடைப்பதை விட அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது.