அரசு கொடுக்கிற ஆயிரம் ரூபாய் வேண்டாமா..? அப்போ முதல்ல இதை பண்ணுங்க..!
நிவாரண உதவித்தொகை மற்றும் விலையில்லா பொருட்களை பெற விருப்பமில்லாதவர்கள் tnpds.gov.in என்ற இணையதளத்திலும், tnpds செயலியிலும் சென்று உதவித்தொகை ரூ.1,000 அல்லது விலையில்லா பொருட்கள் மட்டும் அல்லது இரண்டையும் விட்டுக்கொடுக்கும் தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் யாரும் வெளியில் நடமாட கூடாது என அரசு அறிவித்திருக்கிறது. எனினும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் காய்கறி கடைகள், மருந்தகங்கள், மளிகை கடைகள், பால் வியாபாரம் போன்றவை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனிடையே ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரிசி ரேஷன் கார்டு காரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஏப்ரல் மாதத்திற்கு இலவசமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி நிவாரண உதவித் தொகையான ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே நிவாரணத் தொகை மற்றும் விலையில்லா உணவு பொருட்களை விருப்பத்தின் அடிப்படையில் விட்டுக் கொடுக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை ரூ.1,000 மற்றும் விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிவாரண உதவித்தொகை மற்றும் விலையில்லா பொருட்களை பெற விருப்பமில்லாதவர்கள் tnpds.gov.in என்ற இணையதளத்திலும், tnpds செயலியிலும் சென்று உதவித்தொகை ரூ.1,000 அல்லது விலையில்லா பொருட்கள் மட்டும் அல்லது இரண்டையும் விட்டுக்கொடுக்கும் தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு விட்டுக் கொடுப்பது ஏப்ரல் மாதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விட்டுக்கொடுக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.