தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களின் ஆசை என்ன என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்த முடிவு செய்தது. அதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருக்கும் அரசு பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

அவர்களின் ஆசை விமானத்தில் செல்ல வேண்டும் என்பதாக இருந்திருக்கிறது. இதையடுத்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதற்காக சிவகாசி அரசு பள்ளியை சேர்ந்த 30 மாணவ மாணவிகளை பேருந்தில் மதுரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தில் அவர்கள் அழைத்து வந்து அவர்களின் ஆசையை நிறைவேற்றினர்.

சென்னையில் ஒரு நாள் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக அவர்கள் கூறும்போது, "விமானத்தையே பார்க்காத எங்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நாள் முழுவதும் பொழுதுபோக்கு மையத்திற்கும் அழைத்துச் சென்றது சந்தோசமாக இருக்கிறது. விமானத்தில் அழைத்து வந்து எங்கள் ஆசையை நிறைவேற்றி இருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளனர்.