விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பல்வேறு அமைப்பினரும் வழிபாடு நடத்துவது வழக்கம். பின்னர் அந்தச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு, குளங்களில் கரைப்பர். ஆனால், கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு இந்து அமைப்புகளும் எதிர்பை மீறி சிலை வைப்போம் என கூறியுள்ளனர்.

இந்நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி இந்த முறையீட்டை முன்வைத்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி தாக்கல் செய்த முறையீட்டில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதியளிக்க வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இந்தத் தடை இல்லாத நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படி ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும். அதேபோல், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை விதித்த அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.