தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டத்தின் அளவு வேகமாக உயர்ந்தது. தென்மாவட்டங்களில் பல அணைகள் நிரம்பியதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது.

வைகை அணையிலும் தண்ணீர் வேகமாக நிரப்பி உச்சத்தை அடைந்தது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போது 66 அடி அளவில் நீர் இருப்பு இருக்கிறது. இந்த நிலையில் ராமநாதபுர மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 3000 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இன்று காலையில் தண்ணீர் மதுரை வந்தடைந்த நிலையில் வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை தெற்கு மற்றும் வடக்கு பகுதியை இணைக்கும் தரைப்பாலத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேம்பாலம் வழியாக மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. வைகை கரையோரம் இருக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு தற்போது 755 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 3360 கனஅடி நீர் வெளியேற்றபட்டு வருகிறது.