Asianet News TamilAsianet News Tamil

திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என மக்களை குழப்பி வருகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மதுரை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் உருவாக்கப்பட்ட "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" எனும் அதிமுக பிரச்சார பாடலை வெளியிட்டார்.

DMK is confusing people by saying they will cancel NEET: Edappadi Palaniswami sgb
Author
First Published Mar 29, 2024, 12:20 AM IST

திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியிலே சொல்லி மக்களை குழப்பி வருகிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்யும் நிலைப்பாட்டில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் செல்லூர் கே.ராஜு, நத்தம் விஸ்வநாதன், கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் உருவாக்கப்பட்ட "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" எனும் அதிமுக பிரச்சார பாடலை வெளியிட்டார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய இ.பி.எஸ். பேசியதாவது:

"நமது குரலை நாடாளுமன்றத்தில் டாக்டர் சரவணன் எதிரொலிக்க செய்வார், டாக்டர் சரவணன் ஒரு சிறந்த பண்பாளர், சிறந்த மருத்துவர் மக்களிடம் எளிமையாக பழகக் கூடியவர், டாக்டர் சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும்.

கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக கூடுதலாக உழைக்க வேண்டும்: அதிமுகவினருக்கு இ.பி.எஸ். அட்வைஸ்

5 ஆண்டுகளாக பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மக்களுக்காக எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐந்து ஆண்டுகளாக என்ன செய்தார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அழுத்தம் கொடுத்து இருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கும். காவிரி நதி நீருக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதனை படைத்தார்கள்.

உதயநிதி செங்கலை காட்டி என்ன பிரயோஜனம், 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் செங்கலை ஏன் காட்டவில்லை. நாடாளுமன்றத்தை முடக்கி திட்டங்களை செயல்படுத்தும் தில்லு, திராணி அதிமுகவுக்கு மட்டுமே உண்டு மற்ற கட்சிகளுக்கு இல்லை, எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதற்கு திமுக மூன்றாண்டுகளாக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை தவிர மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திமுக முன்வரவில்லை. 12 ஆண்டுகள் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக எந்த ஒரு திட்டங்களையும் பெற்றுத் தரவில்லை. திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டு மக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

DMK is confusing people by saying they will cancel NEET: Edappadi Palaniswami sgb

திமுக மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகியோருடன் கூட்டணியில் அமைச்சரவையில் பங்கேற்றனர். ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்காக திமுக எந்த ஒரு எல்லைக்கும் செல்வதற்கு தயங்காது. தமிழகத்திற்கு புதிய நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடுபடுவார்கள். திமுக ஆட்சியில் இல்லாதபோது கோ பேக் மோடி என கூறினார். ஆட்சிக்கு வந்தவுடன் வெல்கம் மோடி என கூறுகிறார்.

திமுகவினர் இரட்டை வேடம் போடுகிறார்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடிக்கு ரத்தினம் கம்பளம் விரித்து வரவேற்றார், தமிழ்நாட்டுக்கு வந்த மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை குடை பிடித்து வரவேற்று உள்ளார், பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது, அதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும், விலகினாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் எரிச்சல் வருகிறது, தோல்வி பயத்தின் காரணமாக அதிமுக குறித்தும், என்னை பற்றியும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்காக 520 அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 10% திட்டங்களை கூட செயல்படுத்தவில்லை, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ், திமுக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது, திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியிலே சொல்லி மக்களை குழப்பி வருகிறது, நீட் தேர்வை ரத்து செய்யும் நிலைப்பாட்டில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, கடைக்கோடி மாணவனும் மருத்துவராக வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தினேன், வருடம் தோறும் 2,160 மருத்துவர்களை உருவாக்கக்கூடிய வாய்ப்பை அதிமுக அரசு பெற்று தந்துள்ளது, அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம், திமுக ஒரு சாதனையாவது சொல்லி வாக்கு கேட்க முடியுமா?

3 ஆண்டுகளில் தமிழக மக்களுக்காக செய்யப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து திமுக அரசு கூற முடியுமா?, சட்டம் ஒழுங்கு, ஊழல், போதைப்பொருள் கடத்தல், கடன் வாங்குவது ஆகியவைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் முதலிடத்தில் வகிக்கிறது, திமுக ஆட்சிக்கால முடியும் பொழுது தமிழகத்தின் கடன் சுமையானது 6 லட்சம் கோடியாக இருக்கும், திமுக ஆட்சியில் கடன் வாங்குவதற்கு குழு அமைக்கப்பட்டது, திமுக அரசால் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண விதமாக 55 குழுக்கள் அமைக்கப்பட்டது, ஆனால் இந்த குழுக்களால் எந்தவொரு பயனுமில்லை, அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரையில் மேம்பாலங்கள் மருத்துவமனை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, மதுரை குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக முல்லைப் பெரியாரு அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்"

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான ஆட்டோ டிரைவர்... லாட்டரியில் லக் அடித்ததால் ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!

Follow Us:
Download App:
  • android
  • ios