அதிர்ச்சி.. குழந்தைகள் காப்பகத்தில் 9 சிறுமிகள் உள்பட 11 பேருக்கு கொரோனா.. காப்பகம் இழுத்து மூடல்..!
மதுரையில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 9 சிறுமிகள் உட்பட 11 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தக் காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மதுரையில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 9 சிறுமிகள் உட்பட 11 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தக் காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மதுரை மாவட்டம் சமயநல்லூரில் உள்ள சபரி நகர் பகுதியில் ஆதரவற்றோர்களுக்காக "சாந்தி இல்லம்" என்கிற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6 வயதிற்குட்பட்ட 27 சிறுமிகள் மற்றும் 8 பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.
இதில், பணியாளர் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் இருமல் இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் தங்கியிருந்து 27 குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்தபோது 9 குழந்தைகள் மற்றும் 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறையினர் காப்பகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.