கடவுளே இன்னும் என்னென்ன நடக்க போகுதோ.. தந்தை இறந்த மறுநாளே கொரோனாவுக்கு பெண் நீதிபதி உயிரிழப்பு..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நீதிபதி வனிதா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நீதிபதி வனிதா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஊமச்சிகுளம் பொறியாளர் நகரை சேர்ந்தவர் வனிதா (48). இவர் தஞ்சாவூரில், மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவருடைய தந்தை காமராஜ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு உதவியாக இருந்த நீதிபதி வனிதாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
கடந்த 7ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது தந்தை காமராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, நீதிபதி வனிதா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவர் ஏற்கனவே, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சி ஆகிய நீதிமன்றங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் நீதிபதியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு முதல் நாள் தந்தையும், மறுநாள் மகளும் பலியானது மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.