ஆணவப் பேச்சு.. நீதிமன்றத்தில் கதறிய ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஒரு வழியாக நிபந்தனை ஜாமீன்..!
நீதிபதி மனுதாரரின் வயது, இதய நோயாளியாக இருப்பதைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். வரும் காலங்களில் மதம், அரசியல் பிரச்சினைகளைத் தூண்டும் வகையில், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசக்கூடாது.
அரசியல் தலைவர்களை விமர்சித்து பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18ம் தேதி கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தமிழகத்தில் திமுக பெற்ற வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்தும் கடும் விமர்சனம் செய்தார்.
இது தொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அருமனை காவல் நிலையத்தில் கடந்த 20ம் தேதி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஜார்ஜ் பொன்னையாவை கடந்த 24ம் மதுரையில் வைத்து கைது செய்தனர்.
ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை சிறையிலும், ஸ்டீபன் தூத்துக்குடி சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மனுதாரரின் வயது, இதய நோயாளியாக இருப்பதைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். வரும் காலங்களில் மதம், அரசியல் பிரச்சினைகளைத் தூண்டும் வகையில், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசக்கூடாது. இது தொடர்பாக மனுதாரர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.