தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வெங்காய மூடைகளை ஏற்றிக்கொண்டு பெங்களுருவில் இருந்து லாரி ஒன்று வந்து கொண்டிருந்ததது. லாரியை தர்மபுரியைச் சேர்ந்த ஓட்டுநர் ரஞ்சித்(30) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக அவரது நண்பர் சக்திவேல்(25) என்பவர் இருந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கும் கள்ளிக்குடி அருகே லாரி வந்துள்ளது. அப்போது டயர் பஞ்சராகி விடவே சாலை ஓரம் லாரியை நிறுத்தி ரஞ்சித்தும் சக்திவேலும் மாற்று டயரை மாட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே சாலையில் நெல்லையை நோக்கி மற்றொரு லாரி வந்துள்ளது. அதை ஒட்டிய ஓட்டுனரின் பெயரும் சக்திவேல் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாலை ஓரம் பஞ்சராகி நின்ற லாரி மீது நெல்லையை நோக்கிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கிளீனர் சக்திவேலும், இரு லாரியின் ஓட்டுநர்களும் பலத்த காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிளீனர் சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கள்ளக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.