பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழகத்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பல மாவட்டங்களில் பெருமளவில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். நாளை தலைநகர் சென்னையில் திமுக சார்பாக பிரம்மாண்ட பேரணி நடைபெற இருக்கிறது. இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட் கட்சிகள், அரசியல் இயக்கங்கள், வணிகர் சங்கங்கள், மாணவர் அமைப்பு, நடிகர் சங்கம் என பல்வேறு அமைப்புகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்தநிலையில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை தல்லாகுளம் பகுதியில் இன்று காலை இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல கட்சிகளை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்ட மசோதாவில் இஸ்லாமியர்களையும் இலங்கை தமிழர்களையும் புறக்கணித்ததை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டதாக 20 சிறுவர்கள் உட்பட 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.