திண்டுக்கல்லில் பிரேக் இல்லாமல் ஓடிய பேருந்தை இளைஞர்கள் டயரின் அடியில் கல்லை தூக்கிப் போட்டு நிறுத்தப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழக போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் சரியாக பராமரிப்பு இல்லாமல் இருந்து வருவதால் அடிக்கடி விபத்தில் சிக்குவது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல்லில் இருந்து சிலுக்குவார்பட்டிக்கு அரசு பேருந்து 25 பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. பேகம்பூர் என்ற இடத்தில் பேருந்து சென்றபோது ஓட்டுநர் பிரேக்கை அழுத்தியபோது, அது செயலிழந்தது தெரியவந்தது. இதனால் பேருந்தை கட்டுப்படுத்த ஓட்டுநர் சாலையோரம் இருந்த மக்களின் உதவியை கோரினார்.

இதையடுத்து இளைஞர்கள் சிலர் சாமர்த்தியமாக டயரின் அடியில் பெரிய கல்லைப் போட்டு பேருந்தை நிறுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வளைதலங்களில் வெளியாகி வருகிறது. 

சமீபத்தில் பொள்ளாச்சி அருகே பலத்த காற்று காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதேபோல் அரசு பேருந்தின் பின்புறம் 4 டயர்கள் பொருத்தப்படுவதற்கு பதிலாக 2 டயர்கள் மட்டுமே பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது. கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை வைத்து அரசு பேருந்து இயக்கப்பட்ட சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

"