விண்ணை முட்டும் கோவிந்தா கோஷம்.. பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் அமர்ந்து வைகையில் இறங்கினார் கள்ளழகர்.!
மதுரையின் பிரசித்தி பெற்ற திருவிழா சித்திரை திருவிழா. உலகப்புகழ் பெற்ற அந்த திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவிலில் 12-ம் தேதி பட்டாபிஷேகமும், 13-ம் தேதி திக்குவிஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது.
பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கம்பீரமாக எழுந்தருளினார்.
மதுரையின் பிரசித்தி பெற்ற திருவிழா சித்திரை திருவிழா. உலகப்புகழ் பெற்ற அந்த திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவிலில் 12-ம் தேதி பட்டாபிஷேகமும், 13-ம் தேதி திக்குவிஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது. இதேபோன்று அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டார்.
அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணித்து பாட்டுப்பாடி அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கே திருமஞ்சனமானார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து, பச்சை பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் கம்பீரமாக வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் நேற்று முதலே மதுரை மாநகரில் குவிந்தனர். கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றார் வெள்ளிக் குதிரையில் வந்த வீரராகவப் பெருமாள். கள்ளழகர் சார்பில் தீர்த்தம், பரிவட்டம், மாலை வழங்கி முதல் மரியாதை செய்யப்பட்டது.