மதுரையில் பிறந்தநாள் அன்று நீட் தேர்வு எழுத வந்த 50 வயது வழக்கறிஞர்!
மதுரையில் தனது பிறந்தநாளன்று 50 வயது வழக்கறிஞர் ஒருவர் நீட் தேர்வு எழுத வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்புக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும், நீட் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
அந்த வகையில், 2024-25ஆம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதவுள்ளனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. ஜூன் மாதம் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
ஃபோனில் நலம் விசாரித்த ராகுல் காந்தி: நன்றி தெரிவித்த வெளியிட்ட வில்லேஜ் குக்கிங் தாத்தா!
நீட் தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வருகை தர வேண்டும் என மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மதுரையில் தனது பிறந்தநாளன்று 50 வயது வழக்கறிஞர் ஒருவர் நீட் தேர்வு எழுத வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நாடு முழுவதும் நீட் தேர்வு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்குள் மாணவ மாணவியர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அப்போது, மதுரை நாராயணபுரம் பகுதியில் இருக்கக்கூடிய எஸ்சிவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 50 வயதான வழக்கறிஞர் சந்தானம் என்பவர் நீட் தேர்வை எழுத வந்தார். முதல்முறையாக தேர்வெழுத வருகை புரிந்ததாக தெரிவித்த அவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.