மதுரையில் கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி; அரையாண்டு விடுமுறையை நண்பர்களுடன் கழித்தபோது சோகம்
மதுரையில் கண்மாயில் மூழ்கி 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பிய நிலையில் இருக்கின்றன. இதனிடையே பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்கியதால் சிறுவர்களும், மாணவர்களும் அருகில் உள்ள குளங்களுக்கும், ஏரிகளுக்கும் குளிக்க செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி மதுரை மாடக்குளம் கண்மாயில் மாடக்குளம் மெயின் ரோடு, பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கருப்பு உள்பட மூன்று சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கார்த்திக் கருப்பு என்ற சிறுவன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உள்ளான்.
நீரில் மூழ்கி தத்தளித்த சிறுவனை பார்த்து பதறிப்போன் சக நண்பர்கள் இது தொடர்பாக அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே சிறுவன் நீரில் மூழ்கி இறந்துவிட்டான். இறந்த நிகழ்வு குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதியை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அரையாண்டு தேர்வு விடுமுறையின் முதல் நாளிலேயே 8ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D