மதுரை மீனாட்சி கோவிலுக்கு 1000 கோடி சொத்தா..?? அத்தனையும் மீட்க அதிரடி வேட்டை..!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்து அறநிலைத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்து அறநிலைத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிறைந்துள்ளன. இதனை குத்தகை அடிப்படையில் ஏராளமானோர் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்தவர், சூறாவளி சுப்பையர். இவர் 100 ஆண்டுகளுக்கு முன், மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்களுக்கு தனக்கு சொந்தமான 86 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். இந்த நிலம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே, சர்வேயர் காலனி அருகே அமைந்துள்ளது. காலப்போக்கில் நிலம், தனியார் வசம் சென்றது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்ததும், நிலங்களின் மதிப்பு, பல கோடி ரூபாய் அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்தது.
இதில், 86 ஏக்கர் நிலம் 1,000 கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்ந்தது. எனவே, நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சிலர் ஆக்கிரமித்து, இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில், இந்து அறநிலையத் துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கட்டளை நிர்வாகியாக, கூடலழகர் பெருமாள் கோவில் உதவி ஆணையர் ராமசாமியை நியமித்தது. இவர் தலைமையில், வருவாய்த் துறை, நில அளவைத் துறையினர் நிலத்தை அளவிடும் பணியை தொடங்கினர்.
இது தொடர்பாக உதவி ஆணையம் ராமசாமி கூறுகையில் கோவில் நிலம், இருந்த இடம் தெரியாமல், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். எனவே, முதலில் நிலத்தை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புக்குள்ளான நிலத்தை முழுமையாக அடையாளம் கண்டு அளந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நிலங்கள் மீட்கும் நடவடிக்கை, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என உதவி ஆணையம் ராமசாமி கூறியுள்ளார்.