தாறுமாறாக சென்று ஓட்டலுக்குள் புகுந்த கன்டெய்னர் லாரி..! உடல் நசுங்கி மூதாட்டி பலி..! 5 பேர் படுகாயம்..!
மதுரை அருகே தாறுமாறாக சென்ற லாரி ஓட்டலுக்குள் புகுந்ததில் மூதாட்டி ஒருவர் பலியானார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருக்கிறது போடிநாயக்கன்பட்டி பேட்டை புதூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் பலராமன்(55). மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். இங்கு சந்திரசேகர், வாசுகி, கார்த்திக், ராஜம்மாள் என நான்கு பேர் வேலை பார்த்து வருகின்றனர். உணவகத்திற்கு அருகில் சீதாலட்சுமி(75) என்கிற மூதாட்டி மரச்செக்கு எண்ணெய் விற்பனை செய்து வந்துள்ளார். வழக்கம்போல நேற்று உணவகம் செயல்பட்டு கொண்டிருந்தது.
பிற்பகல் 2.30 மணி அளவில் தூத்துக்குடியை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது. லாரியை திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார்(23) என்கிற இளைஞர் ஓட்டி வந்தார். லாரியில் கல்லுப்பட்டியில் இருக்கும் டிராக்டர் தொழிற்சாலையிலிருந்து டிராக்டர்கள் ஏற்றப்பட்டிருந்தன. உணவகத்தின் அருகே இருக்கும் குலசேகரன் கோட்டை அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது. அதிவேகத்தில் வந்த லாரி தாறுமாறாக சென்று சாலையில் இருந்து இறங்கி சர்வீஸ் சாலையில் ஓடத் தொடங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக சர்வீஸ் சாலையில் இருந்த பலராமனின் ஹோட்டலுக்குள் லாரி புகுந்தது.
இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினார்கள். இந்த கோர விபத்தில் உணவகத்தின் அருகே எண்ணெய் வியாபாரம் செய்து கொண்டிருந்த சீதாலட்சுமி மீது லாரி பயங்கரமாக ஏறி இறங்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். ஹோட்டலின் பெரும்பாலான பகுதிகள் கடும் சேதம் அடைந்தன. ஹோட்டல் உரிமையாளர் பலராமன் உட்பட அங்கிருந்த தொழிலாளர்கள் 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சீதாலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.