தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் மதுரை பகுதியில் மட்டும் 24 திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனிடையே, கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக வருகிற 22-ம் தேதி நாடு முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி பிரதமர் மோடி திடீரென அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, மக்கள் தங்களை தனிமைப் படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார். 

இந்நிலையில், 22-ம் தேதி திருமணங்கள் நடத்த முடியுமா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. அன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் மதுரை, குமரி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்காக மண்டபங்களும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் 22-ம் தேதி திருமணம் நடத்த இருந்தவர்கள் அந்ததந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளை சந்தித்து இதுபற்றி கேட்டனர்.அதற்கு திருமண மண்டபங்களில் 22-ம் தேதி திருமணம் நடத்தக்கூடாது. வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால் திருமண ஏற்பாடுகளை செய்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், மதுரை மாநகர் பகுதிகளில் நாளை நடைபெறவிருந்த 24 திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் 24 திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கில் திருமணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.