இனி அதுக்கு 21 வயசு ஆகனும்..! அரசு போட்ட அதிரடி உத்தரவு..!
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான வயது 21 முதல் 45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தை முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொங்கல் விழா களைகட்ட தொடங்கி விடும். 2020ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் தேதி தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக மாட்டுபொங்கலும் கொண்டாடப்படுகிறது. விவசாய பயன்பாட்டிற்காக வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளான காளை மாடுகள் மற்றும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படும்.
மாட்டுப் பொங்கல் நாளன்று பொங்கல் வைத்து படையலிட்டு கால்நடைகளை மக்கள் வணங்குவார்கள். அதே நாளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற தமிழர் பாரம்பரியமிக்க வீர விளையாட்டுகள் நடைபெறும். தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. காளைகளுக்கு பயிற்சியளிப்பது, வாடிவாசலை தயார்படுத்துவது போன்ற பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்காகன வயது தகுதி அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளலாம் என்று இருந்த நிலையில், அது தற்போது 21 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், அதை அடக்க வரும் வீரர்களுக்கும் உடல் பரிசோதனை முடிந்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தது.