தேர்தல் பரப்புரையின் போது தாசில்தாரை தாக்கிய விவகாரம்; மு.க.அழகிரி விடுதலை - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
மதுரையில் தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராக தாசில்தார் காளிமுத்து தரப்பில் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணைமேயராக பொறுப்பு வகித்த மன்னன், திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில், பொன்னம்பலம், தமிழரசன், நீதித்தேவன், சேகர், மயில்வாகன், ராமலிங்கம், சோலை நாகராஜா, வெள்ளையா பாலகிருஷ்ணன், அய்யனார், கருப்பண்ணன், பாலு, போஸ் உள்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2011ம் ஆண்டு முல் 2019ம் ஆண்டு வரை விசாரிக்கப்பட்டது. பின்னர் 2020ம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அரசு தரப்பு, எதிர் தரப்பு என இருதரப்பு வாதங்கள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழக்கப்பட்டது. அதன்படி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.