மதுரையில் இருக்கும் தெற்கு வாசல் பகுதி அவுல்கார தெருவைச் சேர்ந்தவர் முருகன். வயது 49. இவர் அங்கிருக்கும் ஒரு நகை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். தினமும் காலையில் முருகன் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று விடுவார். பகல் நேரத்தில் அவர் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை முருகன் வழக்கம்போல வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து அவரது மனைவி சமையல் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றுள்ளார். இதை மர்ம கும்பல் ஒன்று நோட்டமிட்டுக் கொண்டிருந்துள்ளது. முருகனின் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்த அவர்கள் உடனடியாக வீட்டிற்குள் புகுந்தனர்.

அங்கு ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்து திறந்த மர்ம நபர்கள் அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த முருகனின் மனைவி வீடு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தவர் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போய் இருப்பதை கண்டு செய்வதறியாது திகைத்தார். உடனே தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த அவர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தெற்குவாசல் காவல்துறையினர் திருட்டு சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் வீடு புகுந்து மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தெற்குவாசல் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்காரணமாக காவல்துறை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.