ராமநாதபுரதம் மாவட்டம் கீழகன்னிச்சேரியை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன். இவரது மகன் ஹரிஷ்பாபு. 17 வயது சிறுவனான இவர் விருதுநகரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுதியில் தங்கியிருந்த ஹரிஷ்பாபு விடுமுறை நாட்களில் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று பள்ளி விடுதியில் இருந்து நண்பர்களுடன் ஹரிஷ்பாபு வெளியே சென்றுள்ளார்.

இதை விடுதி காப்பாளர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். ஹரிஷ் பாபு மற்றும் அவரது நண்பர்களை கண்டித்த தலைமையாசிரியர் பெற்றோரை அழைத்து வர உத்தரவிட்டிருக்கிறார். மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார். இதனால் ஹரிஷ்பாபு மன உளைச்சலில் இருந்துள்ளார். நண்பர்களிடமும் சரிவர பேசவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் யாரும் இல்லாத நேரத்தில் விடுதி அறையில் தூக்கிட்டு ஹரிஷ்பாபு தற்கொலை செய்திருக்கிறார்.

மாணவன் ஹரிஷ்பாபு தூக்கில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்தது. விரைந்து வந்த காவலர்கள் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சடலமாக கிடந்த மகனின் உடலைக்கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமையாசிரியர், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Also Read: கம்பீரமாய் வந்த அய்யனார்..! தமிழ்ச் சமூகத்தின் காவல் தெய்வத்தை பெருமைபடுத்திய மோடி அரசு..!