தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு கூறி உள்ளது. ஆனாலும், தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், தேர்வை தள்ளிவைக்க வேண்டுமென உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்துள்ள அச்சங்கத்தின் தலைவர் பக்தவச்சலம், பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்காமல், ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, தேர்வு எழுதாத 12ம் வகுப்பு மாணவர்கள் பல லட்சக் கணக்கில் தேர்வு எழுத உள்ளதாகவும், இதற்கான மேற்பார்வை பணிகளில் 3 லட்சம் ஆசிரியர்கள் வரை ஈடுபட உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள அந்த மனுவில், கொரோனா அச்சம் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் இத்தனை பேரின் ஆரோக்கிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் எத்தனை சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என கூறவில்லை. தற்போது மாணவர்களால் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும். அத்துடன் அனைத்து தேர்வுகளையும் இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் தமிழகத்தில் குறைவான மாவட்டங்களில் தான் அதிக பாதிப்பு உள்ளது என வாதிட்டார். பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்  தேர்வை தள்ளிவைப்பது மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து, மாநில அரசின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.