மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் சிங்கம். இவரது மனைவி அமுதா. இந்த தம்பதியினருக்கு பாலாஜி என்கிற மகன் இருந்துள்ளார். பாலாஜி அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பாலாஜியின் அறையை சோதனை செய்தபோது பள்ளி நோட்டு புத்தகத்தில் இறுதியாக கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தன் சாவிற்கு காரணம் ஆசிரியர் ரவி தான் என்று குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் ரவி தன்னை கொடுமை செய்ததாகவும் தனது ரத்தக்கண்ணீருக்கு காரணமான ரவிக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என்றும் எழுதியுள்ளார். மேலும் தனது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இறுதி வணக்கம் என்று உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.

பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த ரவி, தனியாக டியூஷன் சென்டரும் நடத்தி வந்துள்ளார். கடந்த வருடம் அவரிடம் டியூசன் சென்ற பாலாஜி, 10 வகுப்பு வந்ததும் வீட்டில் இருந்து படித்து வந்திருக்கிறார். இதனால் மாணவன் பாலாஜியை ஆசிரியர் ரவி பள்ளியில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதமாகவே ஆசிரியர் ரவி ஏதேனும் காரணம் கூறி பாலாஜியை துன்புறுத்தி இருக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் சிறுவனை சமாதானம் செய்து உள்ளனர். இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன் பாலாஜி தற்கொலை செய்திருக்கிறார்.

இதனிடையே ஆசிரியர் ரவி தற்போது தலைமறைவாகி இருக்கிறார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.