அறுந்து கிடந்த மின் கம்பியை அப்புறப்படுத்த முயன்ற பெண் மின்சாரம் தாக்கி பலி, இருவர் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை அப்புறப்படுத்த முயன்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தலசூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். அய்யூர் செல்லும் சாலை அருகே அமைந்துள்ள இவரது வீட்டின் அருகே, சாலையின் குறுக்கே பழுதடைந்து தாழ்வாக தொங்கிய, மின்சார வயரை, அந்த வழியே சென்ற அரசு பேருந்து மீது உரசியதில் மேலும் அறுந்து கீழே விழுந்துள்ளது.
வழக்கம் போல வீட்டில் இருந்த இவரது மனைவி ரத்தினம்மா, இன்று அதிகாலை வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயரை, தொட்டு அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் அலறல் சத்தத்துடன் தூக்கி வீசப்பட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி இருந்த ரத்தினம்மாவை மீட்க முயன்ற அருகில் இருந்த முரளி மற்றும் லோகநாதன் ஆகிய இரண்டு இளைஞர்களும் காயமடைந்தனர்.
தொடர்ந்து மயங்கிய நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட ரத்தினம்மா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதில் லேசான காயமடைந்த முரளி மற்றும் லோகநாதன் ஆகிய இரண்டு பேரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மின்சாரத் துறையின் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு நடந்ததாக கூறி ஆத்திரம் அடைந்த உறவினர்களும், கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்; தஞ்சையில் பரபரப்பு
பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.