கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே இருக்கிறது புதுகுளத்து பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அமுதவல்லி(55). இவரது மகன் ராஜரத்தினம்(40). இவருக்கு லட்சுமி என்கிற பெண்ணுடன் திருமணமாகி 12 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ராஜரத்தினம் கரூரில் இருக்கும் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அமுதவல்லி ஒரு தனியார் பள்ளியில் தொழிலாளியாக பணியாற்றி கொண்டிருந்திருக்கிறார்.

கடந்த மாதம் வேலை பார்க்கும் இடத்தில் அமுதவல்லி வழுக்கி விழுந்திருக்கிறார். இதில் இடுப்பில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்துள்ளார். வேலைபார்க்க முடியாமல் படுத்தப்படுக்கையாக இருந்ததால், அமுதவல்லி மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு விஷமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற அமுதவல்லி, உயிருக்கு போராடியுள்ளார். அதை பார்த்து அவரது மகன் ராஜரத்தினம் அதிர்ச்சி அடைந்தார். சற்றும் எதிர்பாராத வண்ணம், அதே விஷமாத்திரைகளை எடுத்து அவரும் விழுங்கியுள்ளார்.

இருவரும் உயிருக்கு போராடுவதை பார்த்து செய்வதறியாது திகைத்த ராஜரத்தினத்தின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தது. விரைந்து வந்த காவலர்கள் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:  மகன் இறந்த துக்கத்தில் உயிரைவிட்ட தந்தை..! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!