கரூர் அருகே தீப்பற்றி எரிந்த சொகுசு கார்; உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய நாய்
கரூர், கோவை சாலையில் பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் வளர்ப்பு நாய் எச்சரிக்கை செய்து தனது உரிமையாளரை காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி . கரூர் எறிபந்து கழக துணை தலைவராக உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது வளர்ப்பு பிராணியான 6 வயது டாபர்மேன் நாயுடன் வேலாயுதம்பாளையத்திலிருந்து கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலைக்கு உறவினர்களை பார்க்க இன்று மாலை தனக்கு சொந்தமான போர்டு விஸ்டா காரில் வந்துள்ளார்.
கரூர் கோவை சாலையில் பேருந்து நிலையம் அருகே கார் வந்த போது காரின் முன்பக்கத்தில் திடீரென புகை வந்துள்ளது. இதை கண்ட மணியின் வளர்ப்பு பிராணியான டாபர்மேன் நாய் தனது உரிமையாளருக்கு எச்சரிக்கை விடும் வகையில் தொடர்ந்து குறைத்தவாரு வந்துள்ளது. இதனைக் கண்டு சாலையில் சென்றோர் காரைப் பார்த்தபோது காரின் முன் பக்க பேனெட்டில் திடீரென புகை வந்துள்ளது.
இதனையடுத்து, அவசர அவசரமாக காரை விட்டு இறங்கிய மணி தனது செல்ல பிராணியான டாபர்மேன் நாயை காரை விட்டு இறக்கி அருகே உள்ள தடுப்பு கம்பியில் கட்டி விட்டு திரும்பியபோது, கார் திடீரென தீப்பற்றி எறிந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மளமளவென தீப்பற்றி எரிந்த காரை தண்ணீரை பீய்ச்சியடுத்து அணைத்தனர். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு முற்றிலும் தீ அணைக்கப்பட்டது. இதில் கார் எரிந்து சேதமடைந்தது.
இது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது உரிமையாளரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய செல்ல பிராணியான நாயை அவ்வழியே வந்த மக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்