குமரியில் மகனின் கடனுக்கு உதவ முடியாத வருத்தத்தில் பெற்றோர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே மகனின் கடனை அடைக்க உரிய நேரத்தில் உதவ முடியாத வருத்தத்தில் தந்தையும், தாயும் மனம் உடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி அருகே வடக்கன்பாகத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகப்பெருமாள், பிரேமலதா தம்பதி. ஆறுமுக பெருமாள் சென்னை துறைமுகத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சொந்த ஊரான வடக்கன்பாக்கத்தில் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதவன்(32), மாலன்(28) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மகன்கள் இருவருமே திருமணம் முடிந்து சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆதவன் கூடுதலாக நமக்கு ஒரு சொந்த தொழில் வேண்டும் என்று நினைத்து சென்னையில் சுயமாக ஒரு தொழிலும் நடத்தி வந்துள்ளார். கடந்த கொரோனா காலம் இரண்டு ஆண்டுகளில் அந்த சொந்த தொழில் மிகப் பெரிய நட்டத்தை சந்தித்துள்ளது.
நட்டத்தை ஈடுகட்ட நினைத்து அவர் பல இடங்களில் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. தனது நிலையை தந்தையிடம் எடுத்துக் கூறிய ஆதவன் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். அதை பார்த்த தந்தையோ நமது சொத்துகளை விற்று கடனை அடைக்கலாம் என மகனுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
ஆனால் சொத்துகளை விற்பனை செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடி காரணமாக உரிய நேரத்தில் அதை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியும் நாளுக்கு நாள் பல மடங்காக பெருகியுள்ளது. மகனின் கடனை உரிய நேரத்தில் அடைக்க நம்மால் உதவ முடியவில்லையே என்ற வருத்தத்தில் பெற்றோர் இருவரும் வீட்டில் விசம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.