விமான நிலையத்தில் வேலை வாங்தித்தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி - கணவன், மனைவி கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பட்டதாரி வாலிபரிடம் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த விவகாரத்தில் கணவன், மனைவியை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவர் உண்ணாமலைகடை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவரது மின்னஞ்சல் முகவரிக்கு விமான நிலையத்தில் வேலை தொடர்பான அழைப்பு வந்துள்ளது. அதில் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணில் பேசியுள்ளார். அப்போது சென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறுவதாகவும், அதற்கு வருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்று நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டார்.
அப்போது விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பட்டதாரி வாலிபர் தனது சகோதரருக்கும் வேலை வாங்கி தர வேண்டும் என்று கூறி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.2.5 கோடி வரை பணம் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. அதன்பிறகு தான் இவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
குன்னூர் நகராட்சி கவுன்சிலரின் கணவர் குடிநீர் தொட்டியில் குதித்து தற்கொலை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பட்டதாரி் இளைஞர் தான் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பட்டதாரி வாலிபர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சைபர் கிரைம் சூப்பிரண்டு தேவராணி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பட்டதாரி வாலிபர் ஏமாற்றப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குமரி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான காவல் துறையினர் இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தியபோது, திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 45), அவரது மனைவி அம்பிகா (36) ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரத்தில் கோர விபத்து; மீன் வாங்கச்சென்ற 4 பெண்கள் கார் மோதி பலி - முதல்வர் இரங்கல்
காவல் துறையினர் தேடுவதை அறிந்து அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று கேரளாவுக்கு விரைந்து சென்று ரஞ்சித், அம்பிகா இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கணவன்-மனைவியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மோசடி வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.