குன்னூர் நகராட்சி கவுன்சிலரின் கணவர் குடிநீர் தொட்டியில் குதித்து தற்கொலை
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி கவுன்சிலரின் கணவர் குடிநீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர மன்ற 15வது வார்டு உறுப்பினர் செல்வி. இவர் ஓட்டு பட்டறை முத்தாலம்மன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செல்வியின் கணவர் வேலுமணி (வயது 55). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் வேலுமணி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது,
இந்நிலையில் நேற்று இரவு வேலுமணி வீடு திரும்பாத நிலையில் வேலுமணி அடிக்கடி பல கோவில்களுக்கு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் அவர் ஏதாவது கோவிலுக்கு தான் சென்று இருப்பார் என்று கருதியுள்ளனர். இந்நிலையில் மவுண்ட்பிளசன்ட் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் வேலுமணி சடலமாகக் கிடப்பதை இன்று காலை தண்ணீர் திறக்க சென்ற நகராட்சி பணியாளர்கள் கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விழுப்புரத்தில் கோர விபத்து; மீன் வாங்கச்சென்ற 4 பெண்கள் கார் மோதி பலி - முதல்வர் இரங்கல்
இதனைத் தொடர்ந்து குன்னூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வேலுமணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர் இறந்த கிடந்த குடிநீர் தொட்டி மவுன்ட்பிளசன்ட், ஓட்டு பட்டறை சந்திரா காலனி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குடிநீர் தேக்க தொட்டியாகும். இதனால் நகராட்சி பணியாளர்கள் தொட்டியில் இருந்த குடிநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.