திமுக மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் கவுன்சிலர் தலைமறைவு; நாகர்கோவில் மாநகராட்சியில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின்பு முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மகேஷ் பொறுப்பேற்றார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளராகவும் மகேஷ் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் திமுக மேற்கு மாவட்ட செயலாளருக்கும், அமைச்சர் மனோ தங்கராஜ்க்கும் இடையே அவ்வப்போது உட்கட்சி பூசல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44-வது வார்டு கவுன்சிலர் நவீன் சில நாட்களாகவே மேயருக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகாமையில் மேயர் தனது வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது, மேயரின் வாகனத்திற்கு முன்பாக தனது சொகுசு வாகனத்தில் வந்த நவீன் மேயரின் வாகனத்தை இடிக்க வந்ததாகவும், அதன் பின் மேயரின் உதவியாளர் கேட்டபோது கொலை செய்து விடுவதாக கூறி கத்தியை காட்டி மிரட்டியதாகவும் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவசரம்னா வேற ஹாஸ்பிடலுக்கு போ..! திருப்பத்தூரில் அரசு மருத்துவர் அடாவடி பேச்சு
புகாரின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாகர்கோவில் மாநகராட்சி 44 வது வார்டு கவுன்சிலர் நவீன் தலைமுறைவாகியுள்ளார். நவீன் காங்கிரஸ் கட்சியில் நாகர்கோவில் மாநகர தலைவராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது. தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கூட்டணி கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் மாநகராட்சி மேயரை கார் மூலம் இடித்து கொலை செய்ய முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மோதி ராணுவ வீரரின் மனைவி பலி