எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வெறிநாய் கடிக்கான சிகிச்சை? பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெறிநாய் கடிக்கான சிகிச்சை வழங்கப்பட்டதாக பெற்றோர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனிஷ் (வயது 34) ஷைனி தம்பதியினர். இவர்களது இரண்டாவது குழந்தையான 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் காரணமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 25ம் தேதி கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தைக்கான மேல் சிகிச்சைக்காக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் செயல்படும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
அதற்கான வெண்டிலேட்டர் வசதி கொண்ட, ஆம்புலன்ஸ் வசதிக்காக நாகர்கோவில் பகுதியில் செயல்படும் பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற போது குழந்தையை அவசர சிகிச்சை மையத்தில் அனுமதித்து அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அப்போது வெறிநாய்க்கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள்: பள்ளிகளில் இன்று இனிப்பு பொங்கல்!
அரசு மருத்துவமனையிலும் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சை அளித்தனர். மேலும், குழந்தையின் நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை பெற்றுக் கொண்டு அங்கிருந்து உடனடியாக கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வெறிநாய் கடிக்கான எந்த ஒரு தடயமும் இல்லை எனவும், மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு அறிக்கை முறையாக தயார் செய்தனர். அதில் குழந்தைக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் துரித நிலையில் செய்த காரணத்தினால் குழந்தையின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கோவையில் திடீரென வாரச்சந்தைக்குள் புகுந்த கார்; 3 பேர் படுகாயம்
விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகமும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி டீனும் கூறுகையில், குழந்தையின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் கூறும் போது வெறி நாய் கடித்ததாக சந்தேகம் உள்ளதாக கூறியதாகவும், மூளை காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இரு மருத்துவமனைகளிலும் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையிலும் மூளை காய்ச்சலுக்கான சிகிச்சை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால் குழந்தையின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டு உண்மையானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காய்ச்சலுக்காக சிகிச்சைக்குச் சென்ற தனியார் மருத்துவமனையில் தவறுதலாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தனியார், அரசு மருத்துவமனைகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.