மகளின் திருமணத்திற்கு மாவு அரைத்த போது நேர்ந்த சோகம்; திருமண வீட்டில் ஒப்பாரி வைத்த உறவினர்கள்
மகளின் திருமணத்திற்காக கிரைண்டரில் மாவு அரைத்த தாயார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் திருமண வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கீழ பெருவிளை அய்யா கோயில் அருகே வசிப்பவர் சண்முகவேல். ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவருக்கு சாந்தி (வயது 51) என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கும் எள்ளுவிளையைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
திருமணத்திற்கு முதல் நாள் என்பதால் திருமண வீடு மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. இந்நிலையில் மாலையில் சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிரைண்டரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சாந்தி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த திருமணவீட்டிற்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி துடித்தனர்.
பெரம்பலூரில் பயங்கர விபத்து; ஒருவர் பலி 8 பேர் படுகாயம்
உடனடியாக சாந்தியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மருத்தவமனைக்கு வந்து பிரேத பரிசோதனையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தார்.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் நாகர்கோவில் டிஎஸ்பி நவீன்குமார் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து இரவு பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் தாயார் உயிரிழந்த சம்பவம் திருமண வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.