36 வயது வாலிபர் கொரோனாவிற்கு பலி..! குன்றத்தூர் முற்றிலும் முடக்கம்..!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் இருந்தது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவிவருகிறது. நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிறையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே குன்றத்தூர் அருகே வாலிபர் ஒருவர் கொரோனாவிற்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் இருந்தது. இதையடுத்து சென்னை அரசு மருத்துமனைக்கு வாலிபர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தார். அவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அந்த வாலிபர் வசித்து வந்த பகுதி முற்றிலும் முடக்கப்பட்டிருக்கிறது.
அவரது குடும்பத்தினர் மற்றும் வாலிபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இளைஞர் வசித்து வந்த பகுதியில் இருக்கும் காய்கறி விற்பனையாளர்களிடம் இருந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என கூறப்படுகிறது. அது குறித்து சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கடுமையான சுவாச நோய்த்தொற்று மற்றும் உடல் பருமன் ஆகிய நோய்களால் அந்த வாலிபர் பாதிக்கப்பட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.