செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே இருக்கிறது பெரியார் நகர்.இந்த பகுதியைச் சேர்ந்தவர் கம்ருதீன். இவரது மனைவி பாத்திமா கனி. பாத்திமாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கம்ருதீன் முடிவு செய்தார். தனது இருசக்கர வாகனத்தில் பாத்திமாவை அமர வைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கம்ருதீன் சென்று கொண்டிருந்தார்.

செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கம்ருதீனின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் தாறுமாறாக சென்றுள்ளது. ஒருகட்டத்தில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கணவன், மனைவி கீழே விழுந்தனர். கம்ருதீன் உடனே எழுந்து விட்டார். அந்த நேரத்தில் அதே சாலையில் தனியார் பேருந்து ஒன்று தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வேகமாக வந்துள்ளது. பாத்திமா பேருந்து வருவதை கண்டு சுதாரித்து எழுவதற்குள் அவர் மேல் பேருந்து ஏறி இறங்கியது.

இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கண் முன்னே மனைவி ரத்த வெள்ளத்தில் பலியானது கண்டு கம்ருதீன் கதறி துடித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பாத்திமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லேசான காயங்களுடன் உயிர்தப்பிய கம்ருதீனுக்கும் சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.