காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே இருக்கிறது பனையூர் கிராமம். இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அதிகமான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆங்காங்கே 5 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டு கிராம மக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. தண்ணீர் நிரம்பி இருந்த பள்ளத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது நிரம்பிய சந்தியா என்கிற குழந்தை தவறி விழுந்துள்ளது. யாரும் கவனிக்காத நிலையில் மூச்சு திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனிடையே குழந்தையை காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது சந்தியா பள்ளத்தில் இருக்கும் நீரில் சிக்கியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதத்தித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்ததை தெரிவித்துள்ளனர். அதைக்கேட்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தை விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.