கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சாந்தா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு திருமணம் முடிந்து செங்கல்பட்டு அருகே இருக்கும் கல்பாக்கத்தில் வசித்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக இருவரும் கல்பாக்கத்திற்கு வந்துள்ளனர்.

இந்தநிலையில் சென்னை பூந்தமல்லியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருவரும் ஒரு காரில் சென்றனர். காரை கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். சிறுதாவூர் அருகே இருக்கும் கருங்குழிப்பள்ளம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே வேறொரு கார் அதிவேகத்தில் தாறுமாறாக வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜசேகர் வந்த காரின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரின் ஒரு பகுதி அப்பளம் போல நொறுங்கி அதில் பயணம் செய்த ராஜசேகரின் மனைவி சாந்தாவும், ஓட்டுநர் கண்ணனும் உடல் நசுங்கி பலியாகினர். ராஜசேகர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ராஜசேகரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த காவலர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் திருப்போரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.