மாமல்லபுரம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பலியாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே இருக்கிறது பூஞ்சேரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ்(28), வேல்முருகன்(29). நண்பர்களான இருவரும் சிற்பக்கலைஞர்கள் ஆவர். மாமல்லபுரத்தில் இருக்கும் ஒரு சிற்பக்கூடத்தில் இருவரும் வேலைபார்த்து வருகின்றனர். தினமும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக வேலைக்கு செல்வது இவர்களின் வழக்கம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சம்பவத்தன்றும் சிற்ப கூடத்தில் பணியாற்றிவிட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் ஊர்திரும்பி கொண்டிருந்தனர். மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றுள்ளது. அப்போது சாலையோரம் இருந்த கார் மீது மோட்டார் வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் மோகன்ராஜும் வேல்முருகனும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகே இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக மோகன்ராஜ் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார். இதையடுத்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் மாமல்லபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also read: இருமுடி கட்டி மலையேறிய ஓ.பி.எஸ்..! சபரிமலையில் பயபக்தியுடன் தரிசனம்..!