காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மூதாட்டி கன்னியம்மாள். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கன்னியம்மாள் உடல்நிலை தொடர்ந்து சரியில்லாமல் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அவரை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர் . அதன்படி 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியம்மாள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆம்புலன்ஸை ஓட்டுனர் ஜெயக்குமார் ஓட்டி வந்தார். செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை ஆம்புலன்ஸ் இழந்தது. இதனால் தாறுமாறாக சென்ற ஆம்புலன்ஸ் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் அப்பளம் போல் நொறுங்கிய ஆம்புலன்சில் அதில் பயணம் செய்த ஓட்டுனர் ஜெயக்குமார் மற்றும் நோயாளி மூதாட்டி கன்னியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயங்களுடன் இருந்த உதவியாளரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான ஓட்டுநர் ஜெயக்குமார் மற்றும் மூதாட்டி கன்னியம்மாள் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்கனவே பழுதாகி இருந்த நிலையில் அதை சரிவர பராமரிப்பு செய்யாமல் பயன்படுத்தியதே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.