அத்திவரதரை தரிசிக்க ஓடோடி வந்த தெலங்கானா முதல்வர்.. காஞ்சியில் ஓயாத பக்தர்கள் அலை!
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் அத்திவரதரை சந்திக்க வருகிறார்கள். 43-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் மற்றும் பச்சைப்பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க மக்கள் சாரை சாரையாக வரும் நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அத்திவரதரை தரிசித்துவிட்டுச் சென்றார்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் உள்ள குளத்திலிருந்து எழுந்தருளிய அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் கட்டமாக 31 நாட்கள் சயன கோலத்தில் அத்திவரதர் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1 முதல் நின்றகோலத்தில் காட்சி அளித்துவருகிறார். அத்திவரதரை தரிசிக்க மக்கள் சாரை சாரையாக வந்துகொண்டிருக்கிறார்கள்.
அத்திவரதரை தரிசிக்க 10 மணி முதல் 12 மணி நேரம் வரை ஆகிறது. என்றாலும் மக்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் அத்திவரதரை சந்திக்க வருகிறார்கள். 43-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் மற்றும் பச்சைப்பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகை புரிந்தார். குடும்பத்துடன் கோயிலுக்கு வந்த அவர், அத்திவரதரை சந்தித்தார். இதேபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த நடிகை ரோஜாவும் அத்திவரதரைத் தரிசித்துவிட்டு சென்றார்.