அத்தி வரதர் கோயில் பணியின் போது அனைவரது முன்னிலையில் காவல் ஆய்வாளரை ஒருமையில் திட்டியதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ’உணர்வுப்பூர்வமாக பேசப்பட்ட வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டாம். பாதுகாப்பு பணியில் காவலர்கள் மிகச்சிறப்பாக செயல்படுகின்றனர். நாங்கள் ஒரே குடும்பமாக செயல்படுகிறோம்’ என்றூ அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.  

அத்தி வரதர் வைபவத்தில் ஒரு காவல்துறை ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் 0கண்டிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆட்சியர் பொன்னையாவின் கோபத்திற்கு ஆளான அந்த இன்ஸ்பெக்டர் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது காவல்துறை மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டு வரும் அவர்கள் பாதுகாப்பு பணியை புறக்கணிக்கவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சீருடை அணிந்த காவலரை காஞ்சிபுரம் ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டியதற்கு கடும் கண்டனம் வலுத்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா மன்னிப்பு கேட்டுள்ளார்.