கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு..!
காஞ்சிபுரம் அருகே கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் அருகே கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை விஷ வாயு தாக்கியதாக தெரிகிறது.
இதில் கழிவு நீர் தொட்டியில் இருந்த துப்புரவு பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், கார்த்திக், பரமசிவன், லட்சுமிகாந்தன், சுதரதாபாய் ஆகியோர் விஷவாயு தாக்கி 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 6 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தகவல் அறிந்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறை வாகனங்களில் வந்த வீரர்கள் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகி மீது ஸ்ரீபெரும்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவு நீர் தொட்டியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.