காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள நிலையில், குளத்துக்கு பக்தர்களுக்கு படையெடுக்காதவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ்  குளத்திலிருந்து 40 ஆண்டுகள் கழித்து அத்திவரதர் எழுந்தருளினார். இதனையடுத்து அத்திவரதர் வைபவம் ஜூலை 1 முதல் வசந்த மண்டபத்தில் தொடங்கியது. ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சயனகோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்த அத்திவரதர், ஆகஸ்ட் 1 முதல் 17 வரை நின்ற கோலத்தில் காட்சியளித்தார். அத்திவரதரை தினமும் தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்துக்கு வந்தனர். 
இதனையத்து அத்திவரதர் வைபவம் நிறைவடைந்து, நேற்று முன்ம் இரவு அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்கு திரும்பினார். சாம்பிரணி தைலம், மூலிகை திரவியங்கள் அத்திவரதர் பூசப்பட்டு, பூஜைகள் நடைபெற்று அத்திவரதர் குளத்தி வைக்கப்பட்டார். கடந்த ஒன்றரை மாதங்களாக காஞ்சிபுரம் பக்தர்களின் படையெடுப்பால் திணறிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது.
அத்திவரதர் குளத்தில்  வைக்கப்பட்டுள்ள நிலையில், குளத்தில் வழிபாடு செய்ய பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குளத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 2 மாத காலத்துக்கு அனந்தசரஸ் குளத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குளத்துக்குள் பக்தர்கள் இறங்காதவண்ணம் குளத்தைச் சுற்றி தடுப்புசுவரை உயர்த்தவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.