1979 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூன் இறுதியில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார். ஜூலை 1 ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திவரதர் தினமும் வித விதமான மலர் அலங்காரங்களோடு வண்ண வண்ண பட்டுகளில் அருள்பாலித்தார்.

4  முதல்  5  லட்சம் பக்தர்கள் வரையிலும் ஒரு நாளைக்கு தரிசனம் செய்தனர். திருப்பதியை காட்டிலும் அத்திவரதரை காண வந்த கூட்டம் அதிகம் இருந்தது. இந்த 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 17 ம் தேதி அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் மீண்டும் வைக்கப்பட்டார். இனி 2059 இல் தான் வெளி வருவார்.

அத்திவரதர் ஜலவாசம் சென்று விட்டாலும் அவரை இன்னும் பக்தர்கள் மறந்ததாக தெரியவில்லை. இப்போதும் அத்திவரதர் பற்றி மக்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போது நவராத்திரி பூஜைகளுக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. நவராத்திரி காலத்தில் வீட்டில் வைக்கப்படும் கொலு பொம்மைகளை தயாரிக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டில் கொலு வைப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் விதவிதமான பொம்மைகளை வாங்குவார்கள். அந்தந்த ஆண்டுகளில் எது சிறப்பாக கொண்டாடப்பட்டதோ அது சம்பந்தமான பொம்மைகளை வாங்கி வைப்பார்கள். அந்த வகையில் இந்த வருடம் அத்திவரதர் பொம்மைகளை மக்கள் அதிகம் கேட்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் விளாச்சேரி கிராமத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுவது வழக்கம். இங்கு தயார் செய்யப்படும் பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. அந்த வகையில் இந்த வருடம் அத்திவரதர் பொம்மைகளுக்கான ஆர்டர்கள் அதிகளவில் வருவதாக அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.