தொடரும் அதிர்ச்சி..! 23 வயது இளம் செவிலியருக்கு கொரோனா..!
படப்பை பகுதியை சேர்ந்த 23 வயது செவிலியர் ஒருவர் அங்கிருக்கும் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் தாறுமாறாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 759 பேருக்கு புதியதாக உறுதிப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்கிறது. அங்கு நாளுக்கு நாள் எகிறி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பின்படி சென்னையில் மட்டும் 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் மொத்தமாக 9,989 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை சென்னையில் 5,865 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இளம் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 23 வயது செவிலியர் ஒருவர் அங்கிருக்கும் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னையில் இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையில் அவர் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனைகள் நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் தற்போது வரை 264 பேருக்கு தொற்று ஏற்பட்டு 13 பேர் பலியாகி இருக்கின்றனர். அதே போல குரோம்பேட்டையைச் சேர்ந்த 48 வயது என்ஜினீயர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவருடைய குடும்பத்தினரை பரிசோதித்ததில் 44 வயது மனைவி, 18 வயது மகளுக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.