'அவ படிச்சா போதும்'..! மாற்றுத்திறனாளி மகளின் கல்விக்கனவை நிறைவேற்ற 15 ஆண்டுகளாக தூக்கிச்சுமக்கும் தாய்..!
உத்திரமேரூரில் இருக்கும் பள்ளிக்கு தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்து பேருந்தில் ஏற்றி கூடி வருகிறார். பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பள்ளிக்கு மீண்டும் மகளை தூக்கி சுமக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இருக்கிறது பெருங்கோழி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பத்மாவதி. இந்த தம்பதியினருக்கு திவ்யா என்கிற மகள் உள்ளார். அவருக்கு பிறகும் போதே கால்கள் இரண்டும் சூம்பிய நிலையில் இருந்துள்ளது. அதனால் திவ்யாவால் நடக்க இயலாமல் மாற்று திறனாளியாகவே வளர்ந்துள்ளார். இதனிடையே சரவணன் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து சென்றுவிட்டார்.
இதனால் பத்மாவதி தனியொரு ஆளாக மாற்றுத்திறனாளி மகள் திவ்யாவை வளர்த்து வந்துள்ளார். தான் படிக்காவிட்டாலும் மகளையாவது நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அதன்படி தொடக்கக்கல்வியை பெருங்கோழி கிராமத்தில் திவ்யா முடித்துள்ளார். தினமும் பள்ளிக்கு திவ்யாவை, பத்மாவதி தூக்கி சென்றுள்ளார். இதனிடையே மேல்நிலை கல்வி கற்க பக்கத்தில் இருக்கும் உத்திரமேரூர் சென்று தான் பயிலும் நிலை அந்த கிராமத்தில் இருந்துள்ளது. சாதாரண குழந்தைகள் என்றால் தனியாக சென்று வந்து விடுவார்கள். ஆனால் மாற்று திறனாளியான திவ்யா தன்னால் அது முடியாது என்று வருந்தியுள்ளார்.
இந்தநிலையில் சற்றும் யோசிக்காத பத்மாவதி, மகள் படித்தால் மட்டும் போதும் என்று எண்ணி மீண்டும் தானே சுமந்து சென்று பள்ளியில் படிக்க வைக்க முடிவெடுத்தார். அதன்படி உத்திரமேரூரில் இருக்கும் பள்ளிக்கு தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்து பேருந்தில் ஏற்றி கூடி வருகிறார். பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பள்ளிக்கு மீண்டும் மகளை தூக்கி சுமக்கிறார். பள்ளி முடியும் வரை அங்கேயே இருக்கும் அவர் மாலை மீண்டும் மகளை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
இதுகுறித்து பத்மாவதி கூறும்போது, மகளுடன் தினமும் பள்ளிக்கு செல்வதால் தன்னால் கூலிவேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் அதனால் மகளின் கல்விக்கு யாராவது உதவி புரிய வேண்டும் என்றார். தனது மேல்படிப்பிற்கு முதல்வரும் அரசும் உதவ வேண்டும் என்று கூறிய திவ்யா, நல்ல நிலைக்கு வந்த பிறகு தன்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இருப்பதாக தெரிவித்துள்ளார்.