இந்தியா -சீனா நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை, வர்த்தக போட்டி என பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. சீனா சென்ற பிரதமர் மோடி  சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார். அந்த அழைப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக் கொண்டார்.

 சென்னை மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்களையும் சந்திக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பால் மாமல்லபுரம், வரலாற்று சிறப்புமிக்க பழமையான இடமாக இருக்கிறது.  பல்லவ மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கற்கோவில்கள் அங்கு புகழ் பெற்றிருப்பதால், மாமல்லபுரம் வர சீன அதிபரும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ம் தேதி இந்தியா வருகிறார். அவரது தனி விமானம் சீனாவில் இருந்து நேரடியாக சென்னை வருகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கும் அவர், பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபரை வரவேற்கும் மோடியும் அவருடன் ஹெலிகாப்டரில் புறப்பட்டு வருவார்.  அவர்களது ஹெலிகாப்டர் 11-ந்தேதி மாலை மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிராமத்தில் உள்ள ஹெலிபேட்டில் தரை இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடிக்காக திருவிடந்தையில் ஹெலிபேடு அமைக்கப்பட்டது.

சீன அதிபர் வருவதால் அந்த ஹெலிபேடு தரம் உயர்த்தப்படுகிறது. திருவிடந்தையில் தரை இறங்கிய பிறகு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காரில் சுமார் 4.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவளத்துக்கு புறப்பட்டு செல்வார்கள். கோவளத்தில் மிகப்பிரமாண்டமான தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலில் மோடியும், ஜி ஜின் பிங்கும் தங்குகிறார்கள்.

கடற்கரையோரம் அமைந்துள்ள அந்த நட்சத்திர ஓட்டலில் மூன்று அறைகள் கடலை நோக்கி அமைந்துள்ளன. தலா 40 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த மூன்று அறைகளிலும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப அதிநவீன வசதிகள் உள்ளன. அங்கு பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த மூன்று அறைகளும் மேலும் அழகுப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் தேவையான உச்சக்கட்ட பாதுகாப்புக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அந்த அறையில் அக்டோபர் 12 மற்றும் 13-ந்தேதிகளில் 2 நாட்கள் மோடியும், ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இந்த சந்திப்பின்போது இந்தியா- சீனா இடையே உள்ள மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து மோடியும்- ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். 
கோவளம் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் போது கடற்கரையை நோக்கிய கண்கவர் புல்வெளி பகுதியில் அமர்ந்து டீ குடித்தபடி மோடி- ஜி ஜின்பிங் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த புல்வெளி பகுதியில் இருவரும் நடந்து கொண்டே பேசவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதையொட்டி அந்த ஓட்டல் புல்வெளி பகுதி மேலும் அழகுப்படுத்தப்பட்டு வருகிறது.

மோடி, ஜி ஜின்பிங் நடந்து செல்வதற்காக பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர ஓட்டலில் மட்டுமின்றி மாமல்லபுரத்தில் உள்ள புகழ் பெற்ற பல்லவ மன்னர்களின் கற்கோவில்களுக்கும் இரு நாட்டு தலைவர்களும் சேர்ந்து வர உள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள சில அபூர்வ, அதிசய சிலைகளுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அந்த சிற்ப பகுதிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி மாமல்லபுரத்தில் மோடி- ஜி ஜின்பிங் இருவரும் ஏராளமான புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள உள்ளனர்.

அர்ச்சுணன் தபசு காட்சி, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவில் ஆகிய மூன்று இடங்களிலும் இரு நாட்டு தலைவர்கள், அதிகாரிகள் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள உள்ளனர். இதற்காக இரு நாட்டு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்து வருகிறார்கள். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வர உள்ளனர். அவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. நட்சத்திர விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர சிறப்பு பாதுகாப்புபடை அதிகாரிகளுக்கு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது.

மோடி-ஜி ஜின்பிங் இருவரும் 12, 13-ந்தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பிறகு ஒன்றாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர். 13-ம் தேதி அவர்கள் இருவரும் கூட்டாக பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளனர். கோவளம் அல்லது சென்னையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் வருகையை முன்னிட்டு பல பகுதிகள் இப்போதே பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சீன அதிபர் செல்லும் வழிகள் அனைத்திலும் புதிய சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. மாமல்லபுரத்துக்கும் சீனாவுக்கும் இடையே 7-ம் நூற்றாண்டில் இருந்தே தொடர்புள்ளது. 8-ம் நூற்றாண்டில் சீன மன்னர்களும், மாமல்லபுரத்தை ஆண்ட பல்லவ மன்னர்களும் நட்புடன் வாழ்ந்தனர். பொருட்களை பரிமாற்றம் செய்தனர். அதே போன்று தற்போது மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே செண்டிமெண்டில் சீன அதிபரின் மனதை மாற்றி உறவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்கிற திட்டத்தில் மாமல்லபுரத்தை சொர்க்கபுரியாக்க உத்தரவிட்டு இருக்கிறார் பிரதமர் மோடி. 

தமிழர்களை எதிரியாக நினைப்பதாக கூறப்படும் மோடி, எதிரி நாடுகளை நட்பு நாடாக்க தமிழகத்தை செண்டிமெண்டாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று பெருமை கொள்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.