மாமல்லபுரம் அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் பயணம் செய்த போது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் டில்லி (19), மோகனா (15). நேற்று இரவு அவர்கள் மேலும் 2  இளைஞர்களுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் அடுத்த தேவநேரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் கேனில் பெட்ரோல் வாங்கினர். இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க திரும்பினர்.

அப்போது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த வேன் திடீரென இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில், 4 பேரும் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் டில்லி, மோகனா உள்ளிட்ட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த இளைஞரை சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.